மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?

 

மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில் மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் பெயருக்கு ஏற்றார் போல் ராஜ வாழ்கை வாழ்ந்து வந்தார்.அவரிடம் பணம் இருந்த அளவுக்கு நற்பண்புகள் இல்லாமல் இருந்தது. இளந்தென்றல் வெகுளியாக அனைவருடனும் நட்பு பாராட்டி சிறந்த முறையில் வணிகம் செய்து வந்தார், மதிமுகம் அன்பின் உருவமாய் அறிவின் கடலாய் நற்பண்புகளின் உறைவிடமாய் மருத நாட்டில் விவசாயம் செய்து மேகராஜனுக்கு நிகரான செல்வத்தோடு வாழ்ந்து வந்தார்.

இளந்தென்றல் இருவருடனும் நட்பு பாராட்டி வந்தார். மேகராஜன் எப்பொழுதும் உல்லாசமாக பொழுதை கழித்து வந்தார், ஆகவே இளந்தென்றலுக்கு மதிமுகத்தை காட்டிலும் மேகராஜனை பிடித்து இருந்தது. இளந்தென்றலின் வணிகத்தில் சற்று தோய்வு ஏற்பட்டது அதை சரி செய்ய நினைத்த இளந்தென்றல் மேகராஜனை அணுகி பொருளுதவி கேட்டார். அதை சற்றும் எதிர்பாராத மேகராஜன் அவரை கண்டு நகைத்து, உங்களுக்கு தரும் அளவுக்கு என்னிடம் பொருள் இல்லை என்று கூறியதோடு, வணிகம் தெரியாத நீங்கள் எதற்கு அதை செய்ய வேண்டும் என்று இளந்தென்றல் வருத்தப்படும் படி பேசி அனுப்பி வைத்தார்.

இதனால் விரக்தி அடைந்த இளந்தென்றல் வீட்டில் முடங்கினார். இளந்தென்றலின் நிலை அறிந்த மதிமுகம் அவரின் இல்லத்துக்கு விரைந்து அவருக்கு ஆலோசனை கூறியதோடு தகுந்த பொருள் உதவியும் செய்தார். இதை சற்றும் எதிர்பாராத இளந்தென்றல்  நெகிழ்ந்து போனார். நல்லோர் நட்பை உணர்த்த இளந்தென்றல் வணிகத்தில் மீண்டும் சிறந்து விளங்கியதோடு தீயோர் நட்பை தவிர்த்து நற்பண்புகளை கொண்டவர்களோடு மட்டும் நட்பு பாராட்டி வாழ ஆரம்பித்தார்.

மூதுரை வெண்பா

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள்

நற்பண்பு இல்லாத நபர்களிடம் நாம் நல்ல எண்ணத்தோடு பழகினாலும் எந்த காலத்திலும் அவர் நமக்கு நண்பர் ஆகமாட்டார், அதே போல் அவரது நட்பு நமக்கு பயன் தராது. அதே போல் நற்பண்பு மிகுந்த நபர்கள் நம் நிலை தாழ்ந்தாலும் கூட நம்மோடு எப்போதும் போல் சிறப்பாகவே பழகுவர், மேலும் அவரது நட்பு எப்போதும் போல் நற்பயனையே தரும் என்பதை ஒளவை அவர்கள் தெளிவாக இந்த வெண்பாவில் குறிப்பிட்டு உள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *