மூதுரை கதைகள் – கிடைத்த பலன்?

கோட்புலிவேந்தன் என்ற மன்னன் குறிஞ்சி பட்டினத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார், மன்னர் மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். அதன் ஒரு படியாக மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வது வழக்கம். அப்போது மன்னருக்கு தொலைவில் உள்ள செங்கனபுரி பற்றிய தகவல் கிடைத்தது. அந்த நாடு மிகவும் அழகு வாய்ந்த நகரத்தை கொண்டு இருந்தது. இதை கேள்விப்பட்ட மன்னருக்கு அந்த நாட்டை தனித்து சென்று காண ஆசை ஏற்பட்டது.

வயதான துறவி போல் வேடமிட்டு மன்னர் செங்கனபுரி நோக்கி பயணமானார். அந்த நாட்டின் அழகை கண்டு களித்து தன்னை மறந்தார். வழியில் தன்னுடைய உடைமைகளை தவறவிட்ட மன்னர் மாற்றுவதற்கு கூட ஆடை இல்லாமல் அவதிபட்டார். வேறு வழியின்றி மற்றவர்களிடம் உதவி கேட்டார் அதோடு அதற்கான பொருளை தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். துறவியின் பேச்சை கேட்க யாரும் தயராக இல்லை. அப்போது மன்னர் அங்கு முத்துநம்பியை சந்தித்தார். முத்துநம்பி மிகவும் நல்லவர், துறவியை (மன்னனை) விருந்தினருக்கு உரிய மரியாதையோடு அழைத்து வேண்டிய உதவிகளை செய்தார். உணவுக்கு பிறகு துறவிக்கு உடை மற்றும் தேவையான பொருளினை தந்து வழியனுப்பி வைத்தார்.

மன்னர் தன் நாட்டிற்கு வந்ததும் அவரை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். எந்த பலனும் எதிர்பாராமல் உதவும் நல்ல உள்ளமான முத்துநம்பியை நினைத்து வியந்தார். சில ஆண்டுகள் கழிந்தன, செங்கனபுரி மன்னர் குறிஞ்சி பட்டினத்திற்கு வருவதாக ஓலை அனுப்பினார். இதை அறிந்த கோட்புலிவேந்தனுக்கு முத்துநம்பியே நினைவிற்கு வந்தார். பதில் மடலில் முத்துநம்பியை அவசியம் அழைத்து வருமாறு தெரிவித்தார். இரு நாட்டு அரச மரியாதையோடு முத்துநம்பி குறிஞ்சி பட்டினம் வந்து அடைந்தார். முத்துநம்பியை பற்றி செங்கனபுரி மன்னரிடம் தனிமையில் விவரித்தார் கோட்புலிவேந்தன். குறிஞ்சி பட்டினத்தில் மூன்று நாட்கள் ராஜ வசதிகளோடு தங்கிய முத்துநம்பிக்கு ஒரு ஊரும் மன்னரால் வழங்கப்பட்டது. செங்கனபுரி மன்னரும் தன் பங்குக்கு அந்த ஊரில் அவருக்கு அழகிய மாளிகையை கட்டி கொடுத்தார். வற்றாத செல்வத்தோடு தனது நற்பணிகளை குறிஞ்சிப்பட்டினத்தில் தொடர்ந்தார் முத்துநம்பி. தான் செய்து சிறிய உதவி ஒரு ஊரோடு, அழகிய மாளிகை மற்றும் செல்வதோடு இரண்டு நாட்டிலும் நற்பெயரையும் வாங்கி தந்ததை நினைத்து வியந்தார்.

வெண்பா:
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
‘என்று தருங்கொல்?’ எனவேண்டாம் – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

பொருள்:

பிறருக்கு உதவி செய்யும் போது எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் செய்ய வேண்டும், அப்படி செய்தோம் என்றால், தென்னை மரம் எப்படி சுவையற்ற நீரை வேரின் மூலம் எடுத்து கொண்டாலும் சுவையான இளநீரை நமக்கு வேண்டிய காலத்தில் தருகிறதோ அது போல நாம் செய்த சிறிய உதவிக்கும் பெரிய பலன் நிச்சயம் கிடைக்கும்

Leave a Comment