மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?

 

மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில், மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் தனது பெயருக்கு ஏற்றவாறு ராஜ வாழ்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், அவரிடம் இருந்த பணத்துக்கு ஏற்ப நற்பண்புகள் இல்லாமல் இருந்தது.

இளந்தென்றல், வெகுளிச் சுபாவம் கொண்டவர்; ஆனால் அனைவருடனும் நட்பு பாராட்டி, சிறந்த முறையில் வணிகம் செய்து வந்தார். மதிமுகம், அன்பின் உருவமாகவும் அறிவின் கடலாகவும், நற்பண்புகளின் உறைவிடமாகவும் மருத நாட்டில் விவசாயம் செய்து, மேகராஜனுக்கு நிகரான செல்வத்துடன் வாழ்ந்து வந்தார்.

இளந்தென்றல் இருவருடனும் நட்பாக இருந்தார். மேகராஜன் எப்போதும் உல்லாசமாகவே நேரத்தை கழித்து வந்ததால், இளந்தென்றலுக்கு மதிமுகத்தை விட மேகராஜனிடம் தான் அதிக நெருக்கம் இருந்தது.

ஒருநாள், இளந்தென்றலின் வணிகத்தில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டது. அதை சரி செய்ய நினைத்த அவர், மேகராஜனை அணுகி பொருளுதவி கேட்டார். அதை எதிர்பாராத மேகராஜன், அவரை பார்த்து நகைத்தவண்ணம், “உங்களுக்கு தரும் அளவுக்கு என்னிடம் பொருள் இல்லை” எனச் சொல்லிவிட்டு, “வணிகம் தெரியாத நீங்கள் எதற்காக அதை செய்ய வேண்டும்?” என்று இளந்தென்றலை வருத்தப்படும்படி பேசிச் சொல்லிவிட்டு அனுப்பிவைத்தார்.

இதனால் விரக்தி அடைந்த இளந்தென்றல் வீட்டுக்குள் முடங்கி விடுகிறார். இளந்தென்றலின் நிலையை அறிந்த மதிமுகம், விரைந்து அவரது இல்லத்திற்கு சென்று ஆலோசனை வழங்கியதோடு, தேவையான பொருளுதவியையும் செய்தார்.

இதை எதிர்பாராத இளந்தென்றல் நெகிழ்ந்து போனார். நல்லோர் நட்பின் மதிப்பை உணர்ந்த இளந்தென்றல், மீண்டும் வணிகத்தில் சிறந்து விளங்கினார். தீயோர் நட்பை தவிர்த்து, நற்பண்புகளைக் கொண்டவர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டி வாழத் தொடங்கினார்.

மூதுரை வெண்பா

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள்

நற்பண்பு இல்லாத நபர்களிடம் நாம் நல்ல எண்ணத்தோடு பழகினாலும் எந்த காலத்திலும் அவர் நமக்கு நண்பர் ஆகமாட்டார், அதே போல் அவரது நட்பு நமக்கு பயன் தராது. அதே போல் நற்பண்பு மிகுந்த நபர்கள் நம் நிலை தாழ்ந்தாலும் கூட நம்மோடு எப்போதும் போல் சிறப்பாகவே பழகுவர், மேலும் அவரது நட்பு எப்போதும் போல் நற்பயனையே தரும் என்பதை ஒளவை அவர்கள் தெளிவாக இந்த வெண்பாவில் குறிப்பிட்டு உள்ளார்

Leave a Comment